முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளே பொறுப்புச் சொல்ல வேண்டும். அவர்கள் தமது பதவிகளுக்கு ஆசைப்பட்டு மக்களுக்காக குரல் கொடுக்காது மெளனித்துக் கிடக்கின்றனர். இதுவே இன்று முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது என ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கே.வேலாயுதம் விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்தார்.
அவருடனான நேர்காணலை வாசகர்களுக்காக தருகின்றோம்.
விடிவெள்ளி: ஊவா மாகாணத்தில் சிறுபான்மை மக்களின் நிலை எப்படி இருக்கின்றது?
வேலாயுதம்: ஊவா மாகாணத்தில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பேரினவாதிகளினாலும் அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களினாலும் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகளே இதற்கு காரணம்.
தேசிய ரீதியில் இளைஞர்களிடத்தில் முறுகல் நிலையை தோற்றுவிக்கின்றமை ஐக்கியத்திற்கு பெரும் சவாலாக இருக்கின்றது.
நாட்டில் வாழும் அனைவரும் இலங்கையர்களே என்று ஜனாதிபதி கூறி வருகின்ற நிலையில் அவருடைய அமைச்சரவையில் இருக்கின்றவர்களே பெளத்த சிங்கள கோட்பாட்டை வலியுறுத்தி இனவாதம் பேசிக் கொண்டிருப்பதை நாம் என்னவென்று கூறுவது?
நாடு பூராகவும் இருக்கின்ற இதே நிலையைத்தான் ஊவா மாகாணத்திலும் காணக்கூடியதாக இருக்கின்றது. அண்மையில் பதுளை வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற சம்பவமும் இந்நிலைப்பாட்டை உறுதி செய்வதாக இருக்கின்றது.
ஊவா மாகாணத்தை பொறுத்தமட்டில் சிங்கள தமிழ், முஸ்லிம்கள் ஒரு சில சந்தர்ப்பங்களை தவிர பெரும்பாலும் ஐக்கியத்துடன் அந்நியோன்யமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வாழ்க்கை முறைக்கு இன்று பலத்த சவால் தோன்றி வருவதாக எண்ணத் தோன்றுகின்றது.
விடிவெள்ளி: ஊவா மாகாணத்தில் சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருக்கலாம்?
வேலாயுதம்: அண்மைக் கால தேர்தல்கள் மூலம் சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து வருகின்றமை வேதனைக்குரியதாகும். இதற்குக் காரணம் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமையின்மையேயாகும்.
அதேவேளை, சிறுபான்மை வாக்கா ளர் மத்தியில் தமது சமூக பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் பூரணமாக உணரப்படாமல் தேர்தல் காலங்களில் வேறு சமூகத்தவர் வழங்கும் அற்ப சொ ற்ப சலுகைகளுக்கு சோடை போகின்ற நிலை பரந்தளவு காணப்படுகின்றது.
பதுளை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான சிறுபான்மையின இளைஞர்கள் அங்கு வேலைவாய்ப்பின்மையால் வெளிப் பிரதேசங்களில் தொழில் வாய்ப்புக்காக செல்கின்றனர். கடந்த கால தேர்தல் களானது ஒர் இறுக்கமான தினத்தில் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்கள் வாக்களிப்பில் பங்கு கொள்வதில்லை.
ஊவா மாகாண சபையில் இரு பெரிய கட்சிகளினூடாகவும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. எனினும், கடந்த மாகாண சபை தேர்தலின் போது முஸ்லிம்கள் ஒற்றுமையின்றி செயற்பட்டமையால் தமது பிரதி நிதித்துவத்தை இழந்து விட்டனர்.
விடிவெள்ளி: ஊவாவில் முஸ்லிம்கள் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளமையால் எவ்வாறான விளைவுகளை எதிர்கொள்கின்றனர்?
வேலாயுதம்: முஸ்லிம்களின் பிரச்சினைகளை மாகாண சபையின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல் இருக்கின்றது. இவர்களின் சமூக பொருளாதார முறைகளில் மாகாண சபையின் பங்கு முக்கியமானது. இவற்றை ஏனையவர்கள் செய்தாலும் கூட அவர்களின் பிரதிநிதிகள் மூலம் முஸ்லிம்களுக்கு முழுமையானதொரு சேவை கிடைக்க முடிவதில்லை.
முஸ்லிம் கலாசார பிரிவு ஒன்று இருந்தாலும் கூட அதன் மூலம் இன்று வளங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, வேறு எதனையும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளை மாகாண சபை மட்டத்துக்கு கொண்டு வர அதிகாரமற்றவர்கள் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
விடிவெள்ளி: ஊவா மாகாண முஸ்லிம்கள் தமக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
வேலாயுதம்: ஊவா மாகாணத்தில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக ஐ.தே.க.வை ஆதரித்து வந்துள்ளனர். இதன் மூலம் தற்போது பதுளை மாநகர சபை பிரதி மேயராக முஸ்லிம் ஒருவரே இருக்கின்றார். அதற்கு நானும் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளேன். மீண்டுமொரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு தூரநோக்கான சிந்தனையுடன் மக்களும் அரசியல் பிரதிநிதிகளும் செயற்படுவது அவசியமாகும்.
இன்று அரசு முஸ்லிம்களின் இருப்புக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. மத கோட்பாடுகளை முன்னெடுக்க தடையான பல நடவடிக்கைகளை தம்புள்ளை முதற்கொண்டு பல இடங்களிலும் அரங்கேற்றி வருகின்றது. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் முஸ்லிம் மக்களுடைய அரசியல் ரீதியான எழுச்சியையும் சமூக ரீதியான எழுச்சியையும் அடக்கி ஒடுக்கி அவர்களை எடுப்பார் கைப்பிள்ளை போல நடத்துவதற்கு முனைந்து கொண்டிருப்பதை இந்த நாடு இன்று நன்றாக அறிந்துள்ளது. எனவே, எதிர்கால முன்னேற்றத்திற்காக முஸ்லிம்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
விடிவெள்ளி: அண்மைக் காலமாக பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
வேலாயுதம்: பதுளையை பொறுத்த மட்டில் காலத்திற்கு காலம் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் அசம்பாவிதங்களும் தோற்றுவிக்கப்பட்டே வந்துள்ளன. இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும் போது சிறுபான்மை சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து செயல்பட தவறி வந்துள்ளனர்.
இது இவர்களின் பலவீனம் என்பதை பெரும்பான்மை சமூகம் கண்டுள்ளது. ஒரு சிறுபான்மை சமூகம் பாதிக்கப்படும் போது மற்றைய சமூகம் மெளனித்து செயற்படக்கூடிய நிலையை பேரினவாதிகள் எப்போதும் கையாண்டு வந்துள்ளனர்.
அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை பகிரங்கமாகவே அமைச்சர்களது தூண்டுதலின் பேரில் அரசு அரங்கேற்றி வந்துள்ளது.
இதனை எதிர்த்து ஆளும் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அரசை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாது தங்களது பதவிதான் முக்கியம் என்று முஸ்லிம் தலைமைகள் செயற்பட்டு வருகின்றன. இதனால் அரசில் உள்ள இனவாத அமைச்சர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக எந்த பிரச்சினைகள் வந்தாலும் அரசியல் ரீதியாக எந்த அழுத்தமும் தமக்கு வராது என்ற துணிச்சலான நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகளும் இன்னும் சலுகைகளும் கொடுத்தால் தம்மோடு எப்போதுமே ஒட்டிக்கொண்டிருப்பார்கள் என்ற உயர்வான நம்பிக்கையும் அரசிடம் காணப்படுகிறது. இது இன்று முஸ்லிம் மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே தமிழ், முஸ்லிம் மாகாண சபையை அமைத்து சுயாதீனமான முதலமைச்சரை அமைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. இதனூடாக இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இழைக்கின்ற அநீதிக்கு உரத்து குரல் கொடுக்கவும் சர்வதேசத்தின் அழுத்தங்களை பிரயோகிக்கவும் வாய்ப்பிருந்தது. அதனை முஸ்லிம் தலைமைகள் தான் இழக்கச் செய்துள்ளன என்பதை துணிச்சலுடன் கூற வேண்டும்.
பதுளையில் புத்த பகவானின் உருவம் பொறிக்கப்பட்ட கையுறை விற்பனை செய்ததாக கூறி முக்கிய கடையொன்றுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அதன் உரிமையாளர்களை கைது செய்தார்கள். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் முஸ்லிம்களுக்கு பல நாட்கள் வர்த்தகத்தை சீராக மேற்கொள்ள முடியாமல் போனது. இதற்கெல்லாம் காரணம் எம் மத்தியில் ஒற்றுமையின்மையே.
அரசாங்கம் இந்நாடு பெளத்த சிங் களவர்களுக்கே உரியது என்ற தனது எண்ணப்பாட்டை படிப்படியாக அடை ந்து கொள்ள நாடு முழுவதும் சிங்கள மக்களை தூண்டி வருகிறது. தொடர் ந்தும் அரசு தமிழ் பேசும் மக்களை இர ண்டாம் நிலை பிரஜைகளாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்ட மாகவே பதுளை நிலையையும் பார்க்க வேண்டியுள்ளது.
83 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதுளையில் முஸ்லிம் வர்த்தகர்களின் பிரவேசம் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை தொடர விடாது இந்த அழுத்தத்தின் மூலமாக தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை அனுப்பும் நோக்கோடு பெரும்பான்மை இனவாத சக்திகள் செயற்படுகின்றன.
இனவாத சக்திகளின் செயற்பாடுகளை புரிந்து கொண்டு சிறுபான்மையினர் தங்களுக்குள் ஒற்றுமையை மேம்படுத்தி தங்களது இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ள செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.
விடிவெள்ளி: பதுளை ஒரு தமிழ் பிரதேசம். அதனை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கின்றனர் என பொதுபலசேனா அமைப்பு கூறியுள்ளது. இந்த கூற்று தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
வேலாயுதம்: பதுளை 83 க்கு முன்னர் அதிகமான தமிழ் வர்த்தகர்களைக் கொண்ட நகரமாக இருந்தது. 83 ஆம் ஆண்டு கலவரம் இந்த கட்டமைப்பை மாற்ற காரணமாக இருந்தது. அதன் பின்னர் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை சொந்தமாக வாங்கி வர்த்தகத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் பிளவினை ஏற்படுத்தவே இந்த அமைப்பு முயற்சிக்கிறது. தமிழர்களுடைய இடத்தை இஸ்லாமியர்கள் பிடித்துவிட்டனர் அதைக் காப்பாற்ற போராடுகின்றோம் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றுமே பெரும்பான்மை இனவாதிகள் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதே இல்லை. பொதுபலசேனாவின் உள்நோக்கம் எமக்கு விளங்குகின்றது. இவர்களின் நோக்கங்களை ஈடேற்ற சிறுபான்மை மக்கள் இடமளிக்கக் கூடாது.
விடிவெள்ளி: பதுளை சம்பவங்கள் அரசுக்கு எதிரானவர்களின் சதி என அமைச்சர் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்?
வேலாயுதம்: அரசுக்கு எதிரானவர்கள் என்று மறைமுகமாக அவர் கூறுவதை விட நேரடியாகவே யார் என்பதை துணிவுடன் கூறியிருக்க வேண்டும்.
அரசுக்கெதிரான கட்சி ஐக்கிய தேசிய கட்சிதான். அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகளுக்கும் எமது அரசியல் கொள்கைகளுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.
இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் சக்தி தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. எமது கட்சிக்கு முஸ்லிம்களிடத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் அவசியம் கிடையாது. பொலிஸ், இராணுவ அதிகாரங்கள் அரசிடமே இருக்கின்றன.
தம்புள்ளை பள்ளிவாசல் முதல் ஒவ்வொரு பள்ளிவாசல்கள் மீதும் நடத்தப்பட்ட அத்து மீறிய பிரவேசங்கள் தாக்குதல்களுக்கு அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் தான் காரணமென்றால் தம்புள்ளை தாக்குதலின் போது பொலிஸாரும் இராணுவத்தினரும் அமைதியாக இருந்த போது அவர்களும் அரசுக்கு எதிராக செயற்படுகின்றார்களா? இதைத் தானா ஹக்கீம் கூற விரும்புகின்றார்.
பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று கூறுவதை போல இருக்கிறது அவரின் கருத்து.
அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பாரதூரமான சம்பவங்களை தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முடியாத நிலையில் இருக்கும் இவர், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு அரசிற்கு எதிரான சக்திகள்தான் காரணம் என்று கூறுவது வேடிக்கையானதொன்றாகும்.
முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஐ.தே.க. எப்போதுமே குரல் கொடுத்து வருகின்றது.
எதிர்க்கட்சிகளுக்கு முஸ்லிம் தமிழ் மக்கள் மீது அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டு அதில் குளிர்காய வேண்டிய அவசியமே கிடையாது. சிறுபான்மையினருக்கு அதிகாரத்தை பரவலாக்க வேண்டுமென்றே நாம் தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.
விடிவெள்ளி: முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்பு காரணமாக இருக்கலாமென கருதுகிறீர்களா?
வேலாயுதம்: ஊவா மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாகவே நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். இச்சிறுபான்மையினருக்கும் சாதாரண சிங்களவர்களுக்கும் தொடர்ச்சியாக பிரச்சினைகள் இருந்ததில்லை. ஆனால் தற்போது ஒரு சிலர் பெளத்த சிங்கள வாதம் பேசிக்கொண்டு யுத்தத்திற்கு பின்னர் இந்நாட்டை முழு பெளத்த நாடாக சிருஷ்டித்து விட வேண்டும் என்ற கற்பனையில் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
கடந்த கால அரசின் செயற்பாடுகள் காரணமாக தமிழ் மக்களின் சனத்தொகை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்மைய சனத்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்திருக்கின்ற நிலை பெரும்பான்மை பெளத்த சிங்கள வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறது.
அண்மைக்கால இன எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம் என பலரும் என்னிடம் சொல்லியிருக்கின்றனர்.
இவ்வாறான முஸ்லிம் விரோத நிலையை தொடர விடுவது அரசின் இருப்புக்கு நல்லதல்ல. இந்த அரசு தனது அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளிலேயே தங்கியிருக்கிறது. இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகமுள்ளது. இவையின்றி தனித்து எமது வளர்ச்சியை முன்னெடுக்க முடியாது.
எனவே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசு செயற்படுவது தனக்குத்தானே குழி பறித்துகொள்வதற்கு சமனாக அமைந்து விடும்.
நேர்காணல்:எஸ்.என்.எம்.ஸுஹைல்

No comments:
Post a Comment